”சமூக அநீதிகளைத் தட்டிக்கேட்டால் இனவாதியா? புத்தளத்தில் ரிஷாட் கேள்வி”


-சுஐப் எம். காசிம்

திறப்பு விழாக்களிலும் அடிக்கல் நாட்டு விழாக்களிலும் என்னைப் புகழ வேண்டும் என்பதற்காவோ, பொன் ஆடைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவோ, நான் மக்கள் பணி செய்யவில்லை. இறைவனுக்குப் பொருத்தமான வகையில் அரசியல் செய்வதன் மூலம் சமுதாயம் பயனடைய வேண்டும் என்பதே எனது நோக்கம் என்று அமைச்சர் ரிஷாட் பதியுதீன் இன்று தெரிவித்தார்.
புத்தளம் புளிச்சாக்குளம் உமர் பாரூக் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழா அதிபர் எம் யு எம் ஷரீக் தலைமையில் இடம்பெற்ற போது அவர் உரையாற்றினார். இந்த நிகழ்வில் எம் எச் எம் நவவி எம் பி, புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலிசப்ரி, முன்னாள் எம் பி இல்யாஸ், அரச பொறியியல் கூட்டுத்தாபன ஆலோசகர் சட்டத்தரணி மில்ஹான், ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி எம் எஸ் சுபைர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

அமைச்சர் உரையாற்றும் போது கூறியதாவது,
ஆரம்ப காலத்தில் முஸ்லிம்கள் பச்சைக் கட்சியிலும் நீலக்கட்சியிலும் அரசியல் செய்தனர். பின்னர் ஆயுதப் போராட்டம் வடக்குக் கிழக்கில் கூர்மை அடைந்ததை அடுத்து நமது முஸ்லிம் இளைஞர்களும் அந்தப் பிரவாகத்தில் அள்ளுண்டு போகக்கூடாது என்ற உயரிய நோக்கத்திற்காக மர்ஹூம் அஷ்ரப் முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபித்தார். எனினும் அவரின் மறைவின் பின்னர் அந்தக் கட்சி பல்வேறு கூறுகளாக பிரிந்தது. அக்கட்சியிலுள்ளவர்கள் பிரிந்து சில கட்சிகளை உருவாக்கினர். மக்களும் தமது வசதிக்கேற்ப இந்தக்கட்சிகளில் அங்கம் வகித்தனர்.

அரசியல் ரீதியாக முஸ்லிம் அரசியல்வாதிகள் பிரிந்து நின்று கட்சி அரசியல் நடத்தியதனால் முஸ்லிம்களும் அணிக்கு அணியாக பிளவு படும் நிலை ஏற்பட்டது. முஸ்லிம் சமூகத்தில் எத்தனை கட்சிகள் இருந்தாலும் சமுதாய நலனுக்காக நாம் வேற்றுமைக்குள் ஒற்றுமை காண வேண்டும்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நாம் பொதுவான விடயங்களுக்காக ஒன்று பட வேண்டிய கட்டாயத் தேவையுள்ளது. அதற்காக கட்சிகளைக் கலைத்து விட்டு ஒரே கட்சியில் கரைந்து விட வேண்டுமென்று அர்த்தமாகாது.

சுதந்திரத்திற்கு பின்னர் இந்த நாட்டில் மாறி மாறி ஆட்சிக்கு வந்த இரண்டு கட்சிகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். பொதுவான உடன்பாட்டில் இவர்கள் இணைந்துள்ளனர்.

இந்த ஆட்சி முறைக்குள் சிறு பான்மை இன மக்கள் தமது அபிலாஷைகளை எவ்வாறு வென்றெடுக்க முடியும் என்பது பற்றியே கவனத்திற் கொள்ள வேண்டும். சிறுபான்மை மக்களின் ஆதரவின்றி ஆட்சியை நடத்த முடியுமென்ற நிலையை ஏற்படுத்த நாம் இடமளிக்கக் கூடாது.

ஒரு சமூகத்துக்காக பணியாற்றும் போது அல்லது அந்த சமூகத்தின் மீது மேற்கொள்ளப்படும் அநீதிகளையும் அட்டூழியங்களையும் நாம் தட்டிக் கேட்கும் போது எம்மை இனவாதியென முத்திரை குத்துகின்றனர். அதற்காக நாம் பெட்டிப்பாம்பாக இருந்து வாய் மூடி மௌனிகளாக இருக்க முடியாது.

ஒரு சமூகத்தின் பிரதிநிதி அந்த சமூகத்திற்கு ஆபத்து வருகின்றது என்று கருதினால் அல்லது அந்த சமூகம் ஆபத்தில் விழுந்துவிட்டது என்று எண்ணினால் அதனைத்தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்வது தார்மீகப் பொறுப்பு. அதை விடுத்து இறைவன் தந்த அமானிதமான பதவிகளை பயன் படுத்தாமல் தூங்கிக் கிடப்பது நல்லதல்ல.

என்று அமைச்சர் கூறினார்.
Share on Google Plus

About Marupakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துகள்:

Post a Comment