பாலமுனையில் வருகின்ற
19ஆம் திகதி இடம்பெறவிருக்கும் மு காவின் தேசிய மாநாட்டைப் பகிஷ்கரிக்க அக்கட்சியின்
தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவுத்தும் அக்கட்சியின் செயலாளர் நாயகமும்
முன்னாள் பிரதியமைச்சருமான ஹசனலியும் முடிவு செய்துள்ளதாக நம்பகமாகத் தெரியவருகின்றது.
தேசியப்பட்டியல்
எம் பி பதவியை இந்த இரண்டு பிரமுகர்களுக்கும் வழங்க முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூர்
ஹக்கீம் தொடர்ந்தும் ‘பப்பா’ காட்டி வருவதே இந்த பகிஷ்கரிப்பின் மூல காரணமென கட்சி
வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிந்தவூரைப் பிறப்பிடமாகக்
கொண்ட ஹசனலி, முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபகத்தலைவர் மர்ஹூம் அஷ்ரப்புடன் இணைந்து கட்சியை
வளர்ப்பதில் பெரும்பங்காற்றியவர். நேர்மையானவர், துணிச்சலான கருத்துக்களை வெளியிடுபவர்.
மர்ஹூம் அஷ்ரப்பின்
காலத்திலும் அதன்பின்னரும் அவர் கட்சியின் பொருளாலராக இருந்து செயலாளர் நாயகமாக பதவியுயர்வு
பெற்றவர். முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட மாநாடுகளில் வெளிப்படையாக கதைப்பதனால் இவர்
ஹக்கீமின் கோபத்துக்கு அடிக்கடி ஆளாகிவந்த போதும் அதனை ஹக்கீம் எந்தச் சந்தர்ப்பங்களிலும்
காட்டிக்கொண்டதில்லை. இவரது கருத்துக்கள் ஹக்கீமின் செயற்பாடுகளுக்கு இடைஞ்சலாக இருந்ததாலேயே
இம்முறை திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்டுள்ளார், இது தான் உண்மை.
எனினும் அவருக்கு
எம் பி பதவி வழங்கப்படுமென ஹக்கீமும் ஹக்கீமைச்சார்ந்தோரும் பலமுறை நேரடியாகவும் பிறரிடமும்
தெரிவித்திருக்கின்றனர். இருந்த போதும் ஹஸனலியின் கனவுகள் கானல் நீராகவே இன்னும் இருந்து
வருகின்றது.
அதே போன்று முஸ்லிம்
காங்கிரஸின் தவிசாளாரான பசீர் சேகுதாவுத் ஏறாவூரை பிறப்பிடமாகக் கொண்டவர். ஈரோஸ் இயக்கத்தில்
இணைந்து ஆயுதமேந்தி அரசியலுக்குள் நுழைந்த அவர் பின்னர் ஆயுத வழிமுறையை நிராகரித்துவிட்டு
மர்ஹூம் அஷ்ரப்புடன் இணைந்தார்.
கட்சியின் கொள்கை
பரப்புச் செயலாளராகவும் பணியாற்றியவர். பஷீர் சேகுதாவூத் மேடைகளிலும் ஊடகங்களிலும்
ஹக்கீமின் தலைமை பற்றி அடிக்கடி விமர்சிப்பதுண்டு. கட்சியின் உயர்பீடக்கூட்டங்களில்
துணிந்து கருத்துக்களை வெளியிட்டு ஹக்கீமையும் அவர் சார்ந்தோரையும் திணற வைப்பார்.
ஹக்கீமைப் பலதடவை இக்கட்டுக்குள் மாட்டியிருக்கிறார்.
ஏறாவூரில் மற்றுமொரு
அரசியல்வாதியுமான முகா பிரதித்தலைவரும் கிழக்குமாகாண முதலமைச்சருமான ஹபீஸ் நசீர் அஹமட்டும்
பசீர் சேகுதாவுத்தும் கீரியும் பாம்பும் போல செயற்படுபவர்கள். ஹாபீஸைப் பொறுத்த வரையில்
மிகவும் சாணக்கியமான அரசியல்வாதி. பசீர் சேகுதாவூத்தை பொதுத் தேர்தலில் போட்டியிடாமல்
செய்ததற்கும் ஐ தே க தேசியப்பட்டியலில் பஷீருக்கு இடம் வழங்கப்படாமைக்கும் ஹாபீஸின்
அழுத்தமே பிரதான காரணம்.
பொது தேர்தலில்
முஸ்லிம் காங்கிரஸ் சில மாவட்டங்களில் தனித்துப் போட்டியிட்டதனால் அந்த சந்தர்ப்பத்தை
மிகவும் கச்சிதமாகப் பயன்படுத்திய ஹாபீஸ் முகா கையளித்த தேசியப்பட்டியலில் பசீரின்
பெயரைப் புகுத்தவைத்து அவரை நம்பச்செய்தார்.
எது எப்படியிருந்த
போதும் பஷீருக்கு இன்னுமே தேசியப்பட்டியலில் எம் பி பதவி வழங்கப்படவுமில்லை, வழங்கப்படவும்
மாட்டாது என்பது உறுதியாகிவிட்டது. இதன் மூலம் பஷீருக்கு ஹக்கீம் பாரிய துரோகம் இழைத்திருக்கின்றார்.
குமாரி குரே விடயத்தில்
ஹக்கீமுக்கு வந்த துன்பங்களுக்கெல்லாம் ஒத்தடமாக இருந்து அவருக்கு கை கொடுத்தவர் பஷீரே.
இந்த விவகாரத்தை திசை திருப்புவதற்காக ‘சண்டே லீடர்’ பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின்
தொடர்பையும் உதவியையும் ஹக்கீமுக்கு பெற்றுக்கொடுத்தவர் பஷீரே. குமாரி குரே விவகாரத்தை
இலத்திரனியல் ஊடகங்களை பயன்படுத்தி வேறு அரசியல்வாதிகளின் தலையில் கட்ட லசந்தவின் தொடர்பு
அவர்களுக்கு உதவியது.
அவ்வாறான ஆப்த
நண்பனான பஷீரை தூக்கியெறிந்து விட்டு, கட்சியை பல சந்தர்ப்பங்களில் மோசமாக விமர்சித்து
அழிக்க நினைத்த ஐக்கிய தேசியக்கட்சியின் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்
கட்சியின் ஏறாவூர் நகரசபை முன்னால் தலைவரும் கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினரும்
அமெரிக்காவில் கடந்த பல வருடங்களாக அஞ்ஞாதவாசம் செய்தவருமான ஏறாவூர் அலிசாஹிர் மௌலானவை
கடந்த பொதுத்தேர்தலில் மரச்சின்னத்தில் போட்டியிட வைத்து மட்டக்களப்பு மாவட்டத்தில்
அவரை எம்பியாக்கினார் தலைவர் ஹக்கீம்.
கட்சியையும் தலைவரையும்
காப்பாற்றிய பஷீரையும் ஹஸனலியையும் தூக்கியெறிந்துவிட்டு கட்சியைக்காட்டிக்கொடுத்த,
கட்சியை அழிக்க நினைத்த ஹாபீஸையும் மௌலானாவையும் இரண்டு கக்கத்துக்குள் வைத்து அரவணைத்து
வருகிறார் ஹக்கீம்.
இந்த இலட்சணத்தில்
முகா மாநாட்டுக்கு போகவேண்டாமென ஹஸனலி பஷீரின் ஆதரவாளர்கள் அவர்களைக் கோருவதும், போகப்போவதில்லையென
இந்த இரு பிரமுகர்களும் முடிவெடுப்பதும் மிகச்சரியானதே.
-மருதமுனை கலீல்
0 கருத்துகள்:
Post a Comment