வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான கே கே மஸ்தான் எனது கட்சியில் இணைந்து கொள்ளப் போவதாக வெளிவந்த செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லையென்று அமைச்சர் ரிசாட் பதியுதீன் இன்று திட்டவட்டமாக தெரிவித்தார்
வவுனியா இஸ்லாமிய கலாசார அபிவிருத்தி சபையில் இடம்பெற்ற பரிசளிப்பு விழா ஒன்றில் பிரதம விருந்தினராக ரிசாட் பதியுதீன் பங்கேற்றார். இந்த நிகழ்வில் கே கே மஸ்தான் எம் பி, முன்னாள் பிரதியமைச்சர் எஸ் எஸ் எம் அபூபக்கரும் பங்கேற்று உரையாற்றினர்.
இங்கு அமைச்சர் ரிசாட் கூறியதாவது,
நான் மஸ்தான் எம் பியை அழைக்கவுமில்லை, அழைக்கவும் மாட்டேன். சில ஊடகங்கள் அவரிடம் நீங்கள் ரிசாட்டுடன் சேருவீர்களா? இல்லையா? என்று கேட்பார்கள். பின்னர் என்னிடம் அவரை சேர்ப்பீர்களா? இல்லையா? என்று கேட்பார்கள். பின்னர் செய்திகள் திரிபுடுத்தப்படுகின்றன.
பாரளுமன்றத்தில் மஸ்தான் எம் பியை சந்திக்கும் போது நீங்கள் இருக்குமிடம் தான் புத்திசாலித்தனமானது என கூறியிருக்கின்றேன். சிலர் வெல்வதற்காக அவரை பயன்படுத்த நினைத்தார்கள் , ஆனால் அல்லாஹ் அவரை வெற்றி பெற செய்துவிட்டான். அவரது தந்தையார் மக்களுக்கு செய்த உதவிகளுக்கு கிடைத்த பலாபலனே இது. என்னையும் பயன்படுத்தி நல்லதைப்பெற்றுக்கொள்ளுங்கள். அவரையும் பயன்படுத்தி நல்லதை பெற்றுக்கொள்ளுங்கள். இதுவே எனது வேண்டுகோளாகும்.
எம்மைப் பொறுத்த வரையில் பூச்சியத்திலிருந்து ஆரம்பித்த எமது கட்சி இன்று வளர்ந்து அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாக மாறியுள்ளது. எமது நேர்மையான பயணத்திலிருந்து நாம் ஒரு போதும் விடுபட போவதில்லை. என்னை வீழ்த்துவதற்கு இன்று மூன்று வெவ்வேறான சக்திகள் களத்தில் இறங்கியுள்ளன. பெரும்பான்மை சமூகத்திலிருந்து ஒரு சிறிய கூட்டமும் சிறுபான்மை சமூகத்திலிருந்து இன்னுமொரு சிறிய கூட்டமும் நமது சமூகத்தைச் சேர்ந்த காழ்ப்புணர்வு கொண்ட வங்குரோத்து அரசியலை நடத்தும் சக்திகளும் என்னை எப்படியாவது கவிழ்க்க வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றுகின்றன.
எனினும் இறைவனின் துணை எனக்கு இருக்கும் வரை இவர்களின் கனவு ஒரு போதும் நனவாகாது.
0 கருத்துகள்:
Post a Comment