முஸ்லிம்கள் பிறர் தயவை நம்பி வாழாமல் தமது சொந்தக்காலில் நிற்க பழகிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ரிசாட் தெரிவித்தார்.
மன்னார் பண்டாரவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது,
கடந்த அரசை வீழ்ததுவதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முன்னின்று செயற்பட்டதானேலேயே இனவாதிகள் என்னைக் குறி வைத்துத்தாக்குகின்றனர். இதனால் தான் இந்தப்பிரதேசங்களில் தமது பாரம்பரிய பூமியில் மீள்குடியேற வந்த நமது சகோதரர்களுக்கு நாம் உதவியளிப்பதனால் என்னைக் இலக்காக வைத்து பிரசாரங்களை முடுக்கிவிட்டிருக்கின்றனர்.
'வில்பத்து வில்பத்து' என கூக்குரலிட்டு எங்கோ இருக்கும் அந்த இயற்கை வளப்பிரதேசத்தையும் நாம் மீள் குடியேறியுள்ள கரடிக்குழி, மறிச்சுக்கட்டி, பாலைக்குழி போன்ற இடங்களுடன தொடர்புபடுத்தி அவதூறான பிரசாரங்களை மேறகொண்டு வருகின்றனர்.
இவர்களின் இந்தப்பிரசாரங்களுக்கு நம்மவர்களும் துணை போயிருப்பது தான் வேதனையானது.
இந்தப்பிரதேசத்தில் பிறந்து வளர்ந்த அரசியல்வாதிகள் சிலர் இனவாதிகளுக்கு பிழையான தகவல்களை வழங்கி அவர்களை உசுப்பேற்றி வருகின்ன்றனர். அவர்களுக்கு தீனி போடுகின்றனர்.
யுத்தம் முடிவடைந்து இந்தப்பிரதேசத்திற்கு நாம் மீள்குடியேற வந்தபோது வெறுங்கட்டாந்தரைகளையும், இடிபாடுகளுக்குள் கிடந்த கட்டிடங்களையுமே நாம் காண முடிந்தது. இறைவனின் உதவியால் எமக்குள்ள அதிகாரங்களையும் செல்வாக்கையும் பயன்படுத்தி இந்தப்பிரதேசங்களை படிப்படியாக மீளக்கட்டியெழுப்ப முடிந்தது.
சில கட்டடங்களையும் ஓரளவிலான வீடுகளையும் முடிந்தவரையில் நாம் கட்டி அந்த மக்களை படிப்படியாக குடியேற்ற முடிந்தது. என்றாலும் இருபத்தைந்து ஆண்டு காலம் இந்தப்பிரதேசத்தில் வாழ்ந்திருக்காததால் வாழ்வாதார வசதிகளைப்பெற கஷ்டமான சூழ்நிலை ஏற்பட்டது. இவ்வாறான பல்வேறு சவால்களுக்கும் தடைகளுக்கும் மத்தியிலே தான் மக்கள் பணியாற்ற வேண்டியிருக்கின்றது.
கொழும்பில் 'குளு குளு' அறைகளில் இருந்து கொண்டு தேர்தல் காலங்களில் மட்டும் இங்கு வந்து வாக்கு கேட்கும் அரசியல்வாதியல்ல நான். மக்களோடு மக்களாக நின்று அவர்களின் இன்பங்களிலும் துன்பங்களிலும் பங்கேற்று வாழ்வது உங்கள் மனச்சாட்சிக்குத்தெரியும்.
கால் நூற்றாண்டுகளாக நாம் இந்தப்பிரதேசங்களில் வாழாத காரணத்தினால் காடாகிப்போன எமது பாரம்பரியக்காணியை எங்களுக்கும் தெரியாமல் வர்ததமானியின் மூலம் வன பரிபாலனத்திணைக்களம் வன இலாகாவுக்குச்சொந்தமான காணியாக பிரகடனப்படுத்தியதை நீங்கள் அறிவீர்கள். இந்தப்பிரதேசத்திலுள்ள சுமார் பன்னிரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளை 'கரடிக்குழி, மறிச்சுக்கட்டி காடு' என பிரகடனப்படுத்தியுள்ளனர்.
மீள்குடியேற்றத்திற்கான காணிகள் தொடர்பில் என்மீது ஆறு வழக்குகளை இனவாதிகள் தாக்கல் செய்துள்ளனர். அவைகளுக்கு நான் முகம் கொடுத்து வருகின்றேன்.
இந்தப்பிரதேசத்திற்கான வீதி அபிவிருத்திக்கு நாம் எண்பது மில்லியன் ரூபா ஒதுக்கியுள்ளோம். அத்தியவசியமான இடங்களில் ஐந்து பாலங்களை அமைக்கவுள்ளோம்.
மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் வீதி அபிவிருத்திக்கு தனக்கு கிடைத்த ஆறு இலட்சம் ரூபாவை இந்தப்பிரதேச பாதை புணரமைப்புக்கு ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் உங்கள் போக்குவரத்து பிரச்சினை தீருமென நம்புகின்றேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment