இலங்கையின் பொருளாதாரத்துறையில் புதிய திருப்பம் - இலங்கை - ஈரான் வர்த்தக கூட்டமைப்பில் ரிசாட் தெரிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையிலான தேசிய அரசாங்கத்தில் இலங்கையின் பொருளாதாரத் துறையில் புதிய பயணம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வர்த்தகம், சுற்றுலா, மற்றும் முதலீட்டுத் துறைகளில் நாட்டைக் கவர்ந்திழுக்கக் கூடிய வகையிலான நடவடிக்கைகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் இன்று  தெரிவித்தார்.

கொழும்பு கிங்ஸ்பரி ஹோட்டலில் இடம்பெற்ற இலங்கை - ஈரான் நாடுகளுக்கான பொருளாதார கூட்டு ஆணைக்குழுவின் பதினோறாவது மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார். இந்தக்குழுவுக்கு இலங்கைக் குழு சார்பில் அமைச்சர் ரிசாட் பதியுதீனும் ஈரானிய குழு சார்பில் அந்நாட்டு சக்தி வள அமைச்சர் சிச்சியானும் தலைமை தாங்கினர். இந்த மாநாட்டை இலங்கை வர்த்தக திணைக்களம் ஏற்பாடு செய்திருந்தது.  

கைத்தொழில் வர்த்தக அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, நிதி அமைச்சு, மின்சார புத்தாக்க அமைச்சு, பெற்றோலிய வளத்துறை அமைச்சு, சுதேச வைத்தியம், நகர திட்டமிடல் மற்றும் நீர்வளங்கள் அமைச்சு, விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சு, உயர்கல்வி அமைச்சு, மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபை, முதலீட்டு ஊக்குவிப்பு சபை, தேயிலை சபை, இரத்தினக்கல் மற்றும் ஆபரணங்கள் அதிகார சபை, தொலைத்தொடர்பு ஆணைக்குழு, இலங்கை வங்கி, மத்திய வங்கி, ஆகியவற்றின் உயர் அதிகாரிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

இங்கு அமைச்சர் ரிசாட் கூறியதாவது,

இலங்கையும் ஈரானும் பல்வேறு துறைகளில் தமது உறவுகளை நீண்டகாலமாக பேணி வருகின்றது. இரண்டு நாடுகளுக்கிடையிலான நட்பும் பரஸ்பர ஒத்துழைப்புமே உறவைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படை தூண்களாக இருக்கின்றன.

பொருளாதார ஒத்துழைப்பைப் பேணுவதற்காக 1987ம் ஆண்டு அமைச்சு மட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த கூட்டு ஆணைக் குழுவானது இரண்டு நாடுகளுக்குமிடையிலான உறவு, அபிவிருத்தி, வர்த்தக, பொருளாதார தொழினுட்ப ஒத்துழைப்பு விடயங்கள் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட உறவு என்பவற்றை மேலும் வலுப்படுத்த பயன்படுகின்றது. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் தலைமைகள் மற்றும் நாட்டு மக்களுக்கிடையிலான உறவுகளால் சுமூகமான கூட்டு மனப்பான்மை கொண்ட பரஸ்பர புரிந்துணர்வும் நிலவி வருகின்றது.

ஈரான் இலங்கைக்கிடையிலான இரு தரப்பு பொறிமுறையானது வெவ்வேறு துறைகளில் இரண்டு நாடுகளையும் நெருக்கமானதாக மாற்றுவதற்கு மிக முக்கியமான பங்கையும் பாத்திரத்தை வகிக்கின்றது. இனி வரும் காலங்களிலும் இந்த உறவு மேலும் செவ்வனே தொடர்ந்து மக்களின் வளமான வாழ்வுக்கு உதவும் என்பதில். நான் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருக்கின்றேன்.

ஈரானுக்கெதிரான அமெரிக்காவின் பொருளாதாரத்தடையினால் அண்மைய காலங்களில் நமது வர்த்தக பொருளாதார நடவடிக்கைகளில் மெதுவான போக்கும் தன்மையுமே இருந்ததை நாம் உணர்கின்றோம்.
தற்போது நடபெற்றுக் கொண்டிருக்கும் பதினோராவது கூட்டம் பரஸ்பர உறவுகளை கட்டியெழுப்பி புதிய தெம்பினை உருவாக்கும் ஓர் அருமையான சந்தர்ப்பமாக அமைவதில் நான் மகிழ்ச்சி காண்கின்றேன்.

2016ம் ஆண்டு ஜனவரி 16ம் திகதி ஈரானுக்கான அமெரிக்காவின் பொருளாதாரத்தடை தளர்ந்ததை அடுத்து காத்திரமான துறைகளில் எங்களது உறவுகளை மேம்படுத்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
அனைத்து பொருளாதார கஷ்டங்களிலும் இருந்து விடுபட்ட ஈரானுக்கு எனது இதய பூர்வமான வாழ்த்துக்களை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவிக்கின்றேன். இந்த மாநாடு பொருளாதாரத்துறையில் மேலும் நாம் உயர்ச்சி அடைய ஒரு வலுவான களமாக அமையும் என்பதில் நான் உறுதியுடன் இருக்கின்றேன்.

உலக வர்த்தக நிறுவனம் மற்றும் ’GATT’ ஆகியவற்றின் ஸ்தாபக அங்கத்துவ நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும் என தெரிவிப்பதில் நான் பெருமிதம் அடைகின்றேன். உலக பொருளாதார அமைப்புகளுடன் ஒன்றித்து போகும் வகையில் திறந்த பொருளாதார கொள்கையை நாம் பின்பற்றி வருகின்றோம். 1977ம் ஆண்டில் திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தி தென்னாசியாவின் முன்னோடிகளாக நாம் திகழ்கின்றோம்,

2014ம் ஆண்டு தெஹ்ரானில் இடம்பெற்ற 10வது கூட்டு மாநாட்டில் நான் பங்கேற்ற போது ஈரான் மக்களின் விருந்தோம்பலையும், அன்பையும் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
இவ்வாறு அமைச்சர் ரிசாட் கூறினார்.



இந்த விழாவில் ஈரானிய சக்தி வள அமைச்சர் சிச்சியான் கூறியதாவது அரசியல், பொருளாதார, கலாச்சர ரீதியில் இரண்டு நாடுகளும் மிகவும் இறுக்கமான உறவைக் கொண்டுள்ளன. வர்த்தக மேம்பாட்டை அடையாளப்படுத்த இப்போது நல்ல சந்தர்ப்பம் நமக்கு கிடைத்துள்ளது. ஈரான் ஆசிய நாடுகளின் பொருளாதார மேம்பாட்டில் குறிப்பாக இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியில் விஷேட கவனம் செலுத்தி வருகின்றது.


நாம் உலகின் அனைத்து நாடுகளுடனான பொருளாதார உறவை கட்டியெழுப்பி வருகிறோம். எமது ஜனாதிபதி தூர நோக்குடன் செயற்பட்டு வருகின்றார். இன்றைய நிகழ்வு ஒரு காத்திரமான, மறக்க முடியாத நிகழ்வாகும். 
Share on Google Plus

About Marupakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துகள்:

Post a Comment