“முஸ்லிம்களின் மீள்குடியேற்ற வெற்றியிலேயே தமிழ்-முஸ்லிம் உறவு தழைக்கும்” -றிசாட்


வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்ற வெற்றியின் மூலமே தமிழ்  முஸ்லிம் உறவு மீண்டும் தழைத்தோங்க வாய்ப்பு ண்டு என்று அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.


மாந்தை மேற்கு பிரதேசத்தின் ஆள்காட்டிவெளி, பூமலர்ந்தான், காக்கையங்குளம், ஹபீப் நகர், அல் மதீனா,மணல்மூட்டை, சுவர்ணபுரி, பாலைப்பெருமாள்கட்டு,புளியங்குளம் ஆகிய கிராமங்களில் அபிவிருத்தி திட்டங்களையும், மக்கள் நல்வாழ்வுப் பணிகளையும் அமைச்சர் றிசாத் இங்கு அங்குரார்ப்பணம் செய்துவைத்தார். அவர் அங்கு இடம்பெற்ற கூட்டங்களிலும் உரையாற்றினார். 


அமைச்சர் இதன்போது கூறியதாவது, 


அரசியல் காழ்ப்புணர்வு கொண்ட சிலர் வேண்டுமென்றே,என்னை ஓர் இனவாதி என சித்திரித்துக் காட்டும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எனது அரசியல் வாழ்வில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற பேதமின்றி நான் பணியாற்றி வருகின்றேன். யுத்தத்தில் சிக்கி உயிருக்கஞ்சி,உடுத்த உடையுடன் ஓடி வந்த தமிழ் மக்களை ஒமந்தைக்குச் சென்று அரவணைத்து, வவுனியாவில் குடியேற்றி இருக்கின்றேன். அவர்களுக்கு உணவளித்து, ஏனைய உதவிகளையும் வழங்கி, என்னால் முடிந்தவரை பணியாற்றி இருக்கின்றேன். அப்போது வடமாகாணத்திலுள்ள எந்த அரசியல்வாதியும் அங்கு வரவில்லை. மூன்று மாதங்கள் கழித்த பின்னரே அந்த மக்களிடம் வந்து சுகம் விசாரித்த அரசியல் வாதிகளும் நம்முடன் இருக்கின்றனர். 


வன்னி மக்களுக்கு நான் எத்தகைய பணியாற்றி இருக்கின்றேன் என்பது ஒவ்வொருவரின் மனசாட்சிக்கும் தெரியும். இருந்தபோதும் அவர்கள் பேசாமடந்தைகளாக இருப்பதன் பின்னணி உங்களுக்கும் தெரியும். இந்த மாவட்டத்தின் அபிவிருத்தியில் எனது பங்களிப்பும்,ஏனையவர்களின் பங்களிப்பும் உங்களுக்கு விளங்கி இருந்தபோதும், உங்களில் சிலர் சூழ்நிலைக் கைதிகளாக இருப்பதுதான் எனக்கு வேதனை தருகின்றது.


கடந்த தேர்தலில் எனக்கும், எனது கட்சிக்கும் ஆதரவளித்த தமிழ் சகோதரர்களும், அவர்களை வழி நடத்திய முக்கியஸ்தர்களும் துரோகிகளாக கருதப்பட்டனர். நாங்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்குத் தடைகள் போடப்பட்டன.எனினும் நாம் அவற்றுக்கெல்லாம் அஞ்சாமல் எமது பணிகளை முன்னெடுத்தோம். 


தேர்தல் காலத்தில்  பல்வேறு கசப்பான அனுபவங்களை சந்தித்திருக்கின்றோம். இத்தனை தடைகள் இருந்தபோதும், விருப்புவாக்கில் நானே முன்னணி வகித்தேன். தமிழ், சிங்கள மக்களின் ஆதரவும் எனக்கு இருந்ததே அபார வெற்றிக்கு வழி வகுத்தது . வன்னி மாவட்ட மக்கள் பாவப்பட்ட ஜென்மங்கள். 


யுத்தத்தினால் இந்த மாவட்டத்தின் மூன்று இனங்களுமே பாதிக்கப்பட்டது. எனக்குத் தேர்தலில் சிலர் உதவவில்லை என்பதற்காக, நான் அவர்களை வேறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. அவர்களை பழிவாங்கும் எண்ணமும் இல்லை. எனக்குத்தேர்தலில் உதவியளித்த தமிழ் பிரமுகர்களை துரோகிகள் என குற்றஞ்சாட்டிய பின்னர், அந்தப் பிரமுகர்களின் மூலம் என்னிடம் உதவி கேட்டு வந்த போதெல்லாம் நான் உதவி இருக்கிறேன். இவ்வாறு அமைச்சர் றிசாத் கூறினார்.  

Share on Google Plus

About Marupakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துகள்:

Post a Comment