நேர்மையான பயணத்திலிருந்து நாம் ஒரு போதும் பிறழ மாட்டோம் – வவுனியாவில் றிசாட்

-MNM Farwish

வவுனியா  இஸ்லாமிய  கலாசார அபிவிருத்தி சபை பரிசளிப்பு விழாவில்
ஆற்றிய உரையின் தொகுப்பு,

அரசியல்வாதியாக வருவேன் என்று நான் ஒரு நினைத்திருக்கவில்லை. அது இறைவனுடைய ஏற்பாடு. அதே போல் தான் மஸ்தான் எம் பி யோடு ஹுனைஸ் நட்பாக பழகியிருக்காவிட்டால் அவரும் இந்த அரசியலை நினைத்துப் பார்த்திருக்கமாட்டார். இவை அனைத்தும் இறைவனின் நாட்டம்.
மஸ்தான் பாரளுமன்ற உறுப்பினராக வந்து விட்டார் என்று கேள்விப்பட்டவுடன் மிகவும் சந்தோஷப்பட்டேன், இறைவன் ஒருவனே சாட்சி. 
ஒரு வார காலத்திற்கு முன்னரே இன்னுமொரு பாராளுமன்ற உறுப்பினர் வரப்போகின்றார், எங்களது கட்சியின் இரண்டாவது பாராளுமன்ற பிரதிநித்துவம் இல்லாமல் போகப் போகின்றது என்பதை நான் தெரிந்து கொண்டேன். பிரபாகரனுடன் இருந்த மாத்தையா அவரை விட்டுச்  சென்ற பின்னர் பிரபாகரனுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. அடுத்ததாக கருணா சென்றதும் அவருக்கு பேரிழப்பு ஏற்பட்டது.
மர்ஹூம் அஷ்ரப்பை சேகு இஸ்ஸதீன் விட்டுச் சென்ற பின்னர் அவருக்கும் பாரிய இழப்பாகிவிட்டது. அதே போல நானும் எனக்கு உதவியாக ஒருவர் இருக்கட்டும், இந்தக்கட்சியை தேசியக்கட்சியாக இந்தக்கட்சியை வளர்க்க வேண்டும் என்று தான் ஒருவரை கொண்டுவந்தேன், அவரும் போய்விட்டார்.

நான் மஸ்தான் எம் பியை எனது கட்சிக்கு அழைக்கவுமில்லை, அழைக்கவும் மாட்டேன். சில ஊடகங்கள் அவரிடம் நீங்கள் ரிசாட்டுடன் சேருவீர்களா? இல்லையா? என்று கேட்பார்கள். பின்னர் என்னிடம் அவரை சேர்ப்பீர்களா? இல்லையா? என்று கேட்பார்கள். பின்னர் செய்திகள்  திரிபுடுத்தப்படுகின்றன.

பாரளுமன்றத்தில் மஸ்தான் எம் பியை சந்திக்கும் போது நீங்கள் இருக்குமிடம் தான் புத்திசாலித்தனமானது என கூறியிருக்கின்றேன். சிலர் வெல்வதற்காக அவரை பயன்படுத்த நினைத்தார்கள் , ஆனால் அல்லாஹ் அவரை வெற்றி பெற செய்துவிட்டான். அவரது தந்தையார் மக்களுக்கு செய்த உதவிகளுக்கு கிடைத்த பலாபலனே இது. என்னையும் பயன்படுத்தி  நல்லதைப் பெற்றுக்கொள்ளுங்கள். அவரையும் பயன்படுத்தி  நல்லதை பெற்றுக்கொள்ளுங்கள். இதுவே எனது வேண்டுகோளாகும்

எம்மைப் பொறுத்த வரையில் பூச்சியத்திலிருந்து ஆரம்பித்த எமது கட்சி இன்று வளர்ந்து அரசாங்கத்தின் பங்காளிக்கட்சியாக மாறியுள்ளது. எமது நேர்மையான பயணத்திலிருந்து நாம் ஒரு போதும் விடுபட போவதில்லை

எமது சமூகத்தில் கல்வி பற்றிய ஒரு ஆய்வை நாம் மேற்கொண்ட போது, வைத்தியர்கள்  3.5% வீதமும், பொறியியலாளர்கள் 3% வீதமும், நிர்வாக சேவையிலும், வெளிநாட்டு சேவைகளில் 2%மும், கணக்காளர் சேவையில் 1.5% மும் இருக்கின்றனர். ஆனால் வெலிக்கடை சிறைச்சாலையில் 28% எமது சமூகத்தவர்கள் இருக்கின்றனர். .

எனவே தான் கடந்த தேர்தலுக்கு முன்னர் என்னோடு ஒருவரை சேர்த்து வளர்த்து அவரிடம் வன்னியைப் பாரம் கொடுத்துவிட்டு முழு முஸ்லிம் சமுதாயத்திற்கும் பணி புரிய ஆசைப்பட்டேன். 3.5% மாகவுள்ளதை 10% ஆக மாற்றுவதற்கு நாம் அர்ப்பணிப்பு செய்வோம், அதே போல ஏனைய ஒவ்வொரு துறையிலும் இருக்கிற வீதத்தை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதோடு இந்நாட்டிலே வாழுகின்ற பெளத்த, கத்தோலிக்க, மற்றும் இந்து மக்களோடு ஒற்றுமையாகவும் புரிந்துணர்வோடும் இஸ்லாம் காட்டிய வழியிலே நாம் வாழ்வோம். நல்ல கல்வியறிவுள்ள சமுதாயமாக இந்த சமுதாயத்தை கொண்டு செல்ல வேண்டுமென்றுதான் இந்த கட்சி நாடு முழுக்க பணியாற்றி வருகின்றது.

ஆறு வருடங்களுக்கு முன்னர் அனுராதபுரத்திலே நானும் அமைச்சர் அமீர் அலியும் இரண்டு நாள் சுற்றுப்பயணம் செய்தோம். அங்கு வாழும் மாணவர்களின் பரிதாபகர நிலையைக்கண்டோம். முப்பது வருடம் பழைமை வாய்ந்த ஒரு கட்சி, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, மாகாணசபை உறுப்பினர்களையும், பிரதேச சபை உறுப்பினர்களையும் பெற்றிருந்தது. ஆனால் அனுராதபுரத்தில் முதலாம் ஆண்டு மாணவன் ஒருவன் ட்ரக்டரில் ஏறி ஏழு கிலோமீற்றர் பாடசாலைக்கு செல்லவேண்டிய பரிதாப நிலையை கண்டோம். அங்கே பள்ளிவாசல் இருக்கிறது, ஆனால் வுழூ எடுப்பதற்கு நீர் இல்லாத குறையை கண்டோம், அதே போல பாதைகள் இல்லை, வீடுகள் இல்லை, கேட்பதற்கோ பார்ப்பதற்கோ யாருமே இல்லை. தேர்தல்கள் வந்தால் ஜயவேவா’’ போடுகின்ற சமுதாயமாக நாங்கள் வாழ்கிறோம். நாம் கவலைப்பட்டோம், இந்த சமுதாயத்திற்கு விடுதலை இல்லையா? விமோச்னமே கிடைக்காதா என நாங்கள் வருந்தினோம். இறைவனிடத்தில் நாங்கள் துஆ செய்தோம்.
ஒருவருடத்திற்கு முன் ஆட்சி மாற்றம் வந்தது. எல்லாரும் இந்த ஆட்சி மாற வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். ஆனால் கடந்த அரசிலே இந்த சமுகத்திற்கு பயனை பெற்றுக்கொடுக்க மூன்று அரசியல்வாதிகள் இருந்தனர்., ஒருவர் அதாவுல்லா, மற்றையவர் ஹிஸ்புல்லா அடுத்தது நான். எனினும் மகிந்த அரசின் இனவாதக் கொள்கையினால் நான் வெளியேறினேன்.

அன்பு சகோதரர்களே, வன்னி எம் பி என்று மட்டும் நான் நினைத்திருந்தால், என்னை மட்டுப்படுத்தியிருந்தால் நான் மாறியிருக்க முடியாது. வன்னியிலே ஒர் அங்குல காணியையாவது எமது சமூகத்திற்கு அந்த அரசு தான் தந்தது என்றாலும் இந்த நாட்டிலே முஸ்லிம் சமூகத்தின் 20 இலட்சம் மக்களும் எதிர்காலத்தில் அனாதையாகி விடக்கூடாது என்ற காரணத்திற்காகவே மகிந்தவை விட்டு வெளியேறி மைத்திரியுடன் கைகோர்த்தோம்.

முஸ்லிம்களின் கட்சி என்ற கூறும் கட்சியும் அன்று இருந்த இடம் உங்களுக்கு தெரியும். நானும் அந்தப்பக்கத்தில் இருந்து, அதாவுல்லாவும், ஹிஸ்புல்லாவும், அங்கே இருந்தால் முஸ்லிம் சமூகத்தின் நிலை என்னவாகும்? ஒரு கட்சி, அல்லது ஒரு தலைமைத்துவம் இல்லாமல் அத்தனை தியாகத்தையும் நமது சமுதாயம் செய்துவிட்டு நாளை அநாதரவான நிலையில் இந்த சமுதாயம் தள்ளப்பட்டுவிடக்கூடாது என்ற பயத்தினாலேயே உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியிலே நாம் கடந்த அரசை விட்டு செல்லுவதற்கு முடிவெடுத்தோம்.

நாம் எடுத்த முடிவினால் முப்பது வருடங்கள் பழமைவாய்ந்த முஸ்லிம் கட்சியும் வந்து சேர்ந்தது. அதன் பிறகு 20 எம் பிக்கள் வந்து சேர்ந்தனர். நான்கு இலட்சம் வாக்கு வித்தியாசத்திலே தான் அந்த அரசு வீழ்ந்தது. இரண்டு இலட்சம் வாக்கு குறைந்திருந்தால் கூட மைத்திரிபால சிறிசேன அவர்களுடைய வெற்றி கேள்விக்குறியாக இருந்திருக்கும். 70 பிரதேச சபை உறுப்பினர்களையும், 7 மாகாண சபை உறுப்பினர்களையும் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டே நான் சென்றேன். அதன் பிறகு சகோதரர் ரவூப் ஹக்கீம் நூற்றுக்கணக்கானவர்களோடு அங்கே வந்து சேர்ந்தர். அதன் பிறகு பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா உள்ளிட்ட பலர் வந்து சேர்ந்தனர்.

இந்த வெற்றியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு பாரிய பங்குண்டு என்று ஆய்வுகள் கூறுகின்றது. எமது மைத்திரி அணியுடன் இணையும் வரை வெற்றி தோல்வியில் தளம்பல் நிலை இருந்தது. பத்து வீதமாக வாழுகின்ற முஸ்லிம் சமுதாயம் நூற்றுக்கு நூறுவீதம் வாக்களிக்கும் நிலை இருந்தது. எனினும் 74% வீதம் வாழுகின்ற பெளத்த சமூகத்தில் 30% ஆனோரே ஐக்கிய தேசிய முன்னனி வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவாக இருந்தார்கள். எப்போது நாங்கள் அவர்களுடன் இணைந்தோமோ அதன் பிறகு அந்தக்கட்சியின் வளர்ச்சி வேகமடைந்ததை அந்த ஆய்வு காட்டி நின்றது.

தேர்தல் முடிந்த அடுத்த நாள் புதிய ஜனாதிபதியை நான் சந்திக்க சென்றேன். என்னை அரவணைத்து, என் கையைப்பற்றிக் கொண்டு அவர் பின்வருமாறு சொன்னார் ”உங்களுடைய வருகையும், சம்பிக்கவின் வருகையும் தான் என்னுடைய வெற்றியிலே பாரிய மாற்றத்தை காட்டியது” என்று அங்கு நின்ற அரசியல்வாதிகளுக்கு மத்தியிலே சொன்னார். பெருமைக்காக இதை நான் சொல்லவில்லை.. ஏன் இதை சொன்னார் என்றால் நாளை இம்மாணவர்களும் இதை ஒரு படிப்பனையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக.
பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒரு சிறிய இனவாத குழுவும், சிறுபான்மை சமூகத்தில் இன்னுமொரு சிறிய இனவாத குழுவும் நமது சமூகத்தில் இருக்கின்ற ஒரு காழ்ப்புணர்வு கொண்ட கூட்டமும் என்னை வீழ்த்த சதி செய்கின்றார்கள்.


இவ்வாறு அமைச்சர் கூறினார்.
Share on Google Plus

About Marupakkam

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 கருத்துகள்:

Post a Comment